வியாழன், மே 29, 2014

மொய் எழுதப்போறீங்களா?



முழுகவனம் செலுத்துங்கள்.
 
இந்த மாதம் முழுவதும் பல விசேஷங்கள். திருமணங்கள். காதணி விழா, புதுநன்மை விழா, மஞ்சள் நீராட்டுவிழா, புதுமனை புகுவிழா...இப்படி பல.
கொளுத்தும் வெயிலையும் தாண்டி அன்பர்களின் உபசரிப்புக்கள் ஆங்காங்கே நெடுநாள் சந்திக்காத விட்டுப்போன சொந்தங்களின் சந்திப்புகள் அடிக்கடி விதவித சாப்பாடுகளுடன் விருந்துகள்.... அருமையாய் தான் போய் கொண்டுருக்கிறது விடுமுறை... இன்னும் சில நாட்களில் எந்திரமாய் ஓடிப்போக வேண்டும் பிள்ளைகள் பள்ளிக்கு....



பெரும்பாலும் எல்லா விசேஷங்களிலும் கண்டது..... மொய் கவர் உங்ககிட்ட எக்ஸ்ட்ராவா இருக்கா? என்று ஒருவர் அடுத்தவரிடம் கேட்பது என்பது பல  அன்பர்களின் கேள்விக்கணைகளாக இருந்தது.


சின்ன ஐடியா......நான் செய்வது.... பிள்ளைகளுக்கு எழுதுப்பொருட்கள் வாங்கும்பொழுது மொத்தமாக ஒன்று இரண்டு கட்டு வாங்கி வைத்துக்கொள்வேன்.அதை ஒரு பாலித்தீன் கவரில் போட்டு வீட்டில் கண்ணில் தென்படும் இடத்தில் தொங்கவிட்டுவிட்டேன்.... எப்பூடி? தேவைக்கு அவசரத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். எந்த விசேஷமானாலும் நான்கைந்து கவர்கள் எக்ஸ்ட்ராவா எடுத்துச்செல்வேன்.அத்தனையும் காலியாகிவிடும்.

செலவு மீதம்......... தனியாக ஒருகவர் வாங்கினால் ஒரு ரூபாய்...மொத்தமாக வாங்கினால் மிகக்குறைவு. ஒருரூபாய் பெரிய விஷயம் அல்ல. சிறுதுளிதானே பெருவெள்ளம். வாங்கப்போகும் அந்த நேரத்தில் சில்லறை இருக்காது அல்லது கடைகள் அருகில் இருக்காது. அடுத்தவரிடம் நெளிந்து சுளிந்து கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும். 

சில விசேஷங்களுக்கு நான் பரிந்துரைச்செய்து அவர்களே ரிசப்ஷனில் சந்தனம் கற்கண்டுக்கு பக்கத்தில் கிப்ட்கவர்ஸ் வைத்துவிடச்செய்வேன்...எல்லாருக்கும் உதவியாக இருக்கும்.

இப்படியாக மொய் எழுதும் பழக்கம் வந்தது ஏன் எதற்கு எப்படி என்று எப்பொழுதோ அன்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
 

விழா நடத்துபவர்கள் எப்படிப்பட்ட சூழலில் இருப்பார் என்பது பலருக்குத்தெரியாது...அந்த காலத்தில் கடன்கள்,கைமாத்து (வட்டியில்லா கடன்) கடன் வாங்கி தான் பெரும்பாலான விழாக்கள் நடத்துவார்களாம்..... மொத்தமாக விவசாயிகளிடம் பணம் ஏது ? .....பயிர் விளைந்ததும் விற்று கடன் சரிசெய்வார்களாம் இப்படியாக நடத்திக்கொண்டிருக்கும் அந்த விழாவின்  கடன் சுமையை குறைக்கும் விதமாக  மொய் கொடுப்பவரும் பணம் கொடுத்து பங்குக்கொண்டால் நம்மால் ஆன சிறு உதவியாய் அந்த தொகை அமையுமாம். மொய் எழுதுவதற்கென்றே ஆட்கள் அமர்ந்து அதனை எழுதி வைத்துக்கொள்வார்கள். இன்னார் இன்னார் இவ்வளவுச்செய்தார்கள் என்று.அதனை மைக்கில் ஒலிப்பெருக்கியில் ஊரே அறியும் படி வாசிப்பார்கள்... இப்படி நடக்கும் கூத்து தான் இந்தப்பதிவு. அவசியம் வாசிங்க. காரணம் திரும்ப அவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்.


இது ஒரு வட்டியில்லாக்கடன். நீ எனக்கு உதவிச்செய்தாய் அதைப்போன்று நான் உனது தேவைக்கு இதே தொகையோ அல்லது மேலோ கண்டிப்பாக கொடுத்து உதவிச்செய்வேன் என்பதாக அமையும். இதுதான் மொய் எழுதுவதற்காண காரணம் என்றார் அன்பர்... காரணம் சரியாகவேப்படுகிறது வேறு காரணங்கள் இருப்பின் அன்பர்கள் தெரிவிக்கலாம்.


ஆனால் இப்பொழுது மொய் வைத்தல் என்பது பேஷனாகிவிட்டது.
 பல வகையான  உஷாரான பார்ட்டிகள் இருக்கிறார்கள்....நமக்கு எவ்வளவு வச்சி இருக்காங்கனுப்பாரு அத அப்படியே வச்சிடு.....அட அதுல பாதி வச்சா போதும் மீதிய அடுத்த விசேஷத்திற்கு வச்சிக்கலாம்... ஒரு அம்மணி புலம்பியது “அடிப்பாவி நான் அவ வீட்டு ஏழுஎட்டு விசேஷத்திற்கும் போய் ஒவ்வொன்னுக்கும் நூறு ரூபாய்க்கு குறையாம பணம் வச்சிஇருக்கேன்.இப்ப தான் என் வீட்டு மொதோ விசேஷம் வெறும் 50 ரூபாய் வச்சிட்டுப்போய் இருக்கா....நாயி..
பாவம் அந்த அம்மணி. இத்தனை அவர் குறிப்பிடும் நபர் அதிக வருவாய் உள்ள அம்மணி தான். என்ன செய்வது....அவர்கள் மனநிலை அப்படி.


நாங்க.
மாப்ள சாப்பாடு நல்லா இருந்தா காசு வைப்போம் இல்லைனா... கோவிந்தா தான் என்று கிண்டல் செய்வோம்.


அண்மையில் விழாக்கள் என்றால் பார்ட்டி வைப்பது என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பார்ட்டி என்பது சிலருக்கு சந்தோஷமான விஷயம் சிலருக்கு சங்கடமான விஷயம். குடும்பத்துடன் செல்லும் கணவன்மார்கள் அங்கே சென்றால் திரும்ப வர ஏக காலம் ஆகும். இதனால் குடும்பத்தில் சண்டை... நன்றாக வந்த நண்பர்கள் இங்கே சண்டையில் பிரிந்துப்போவர்...கோபத்தில் இருந்த  நண்பர்கள் ஒன்றாக சேர்த்துவைக்கும் இடமாகவும் பார்த்திருக்கிறேன்.
ஆனா ஒன்னுங்க, கால்மணி நேரத்தில் ஆங்கிலம் கற்க வேண்டுமானால் இங்க ஐக்கியம் ஆகலாம் ......எப்படித்தான் இந்த இங்கிலீஸ் அப்ப மட்டும் தண்ணிப்பட்டபாடாய் வருகிறது என்பது..... அந்த ஆங்கில மருந்துக்கே வெளிச்சம்.

ஆச்சர்யம்...
ஒரு நண்பர் வீட்டு விசேஷம்.... என்னிடம் இன்சார்ஜ்.....பார்ட்டிக்கு.
யாரக்கூப்பிட்டாலும் வேண்டாம் என்கிறார்கள்..அட ஆண்டவா!...மிலிட்டரி சரக்கு கிடைக்கலைனு அவனவன் நாயாய் பேயாய் அலையறான் இங்க என்னடானா வருந்தி அழைத்தாலும் யாரும் வருவதாய் இல்லை...இப்படி ஒரேயாடியா திருந்திட்டாங்களா மக்கள்?...மெதுவாக ஒன்று இரண்டுபேர் வர அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நான் எஸ்கேப்.....அடுத்த வீடு பாக்கனுமே...ஏன்னா ஒரே நாள்ல மூனு நாலு விசேஷங்கள்.
சில வீடுகளில் உரிமையோடு கேட்டு வாங்கி குடிப்பதை பார்த்திருக்கிறேன்  இங்க என்னடானா இந்த கூத்து.... ஓ ! இடம் அறிந்து தான் குடிப்பார்களோ!...

சிலர் இப்படி கூறுவதை கேட்டிருக்கிறேன்....அங்க போனா ஒன்னும் இருக்காது மச்சான்..... அந்த ஒன்னும் என்பது சாப்பாடு அல்ல.
‘அது பங்க்ஷன்...... அந்த வீட்டில் சாப்பாடு சாப்பிடாதாவன் கூட சொல்லும் வார்த்தை செம பார்ட்டி மாப்ள நீதான் வரல.....ஸ் அப்பா....


என்ன என்னமோ உளரியாச்சு....


நிற்க..

  • வீட்டில் கவர் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
  • யார் யார் உங்களுக்கு ஏற்கனவே என்னென்ன செய்தார்களோ அதனை திருப்பிச்செய்து விடுங்கள்.
  • பொருட்களைவிட பணமாகவே தந்துவிடலாம். ஏன்னா சில கல்யாணத்துல நான்கைந்து கடிகாரங்கள், ஏழெட்டு ஃபோட்டோ பிரேம்கள் வந்து இருக்கும்.பணம் என்றால் அவர்களுக்குத்தேவையானதை வாங்கிக்கொள்ள முடியும்.
  •  இன்னொரு கில்லாடி சொன்னார் அவருக்கு வந்த கிப்ட் ஐட்டங்களில் வேண்டாதவைகளை ரீ பேக்கிங் செய்து வைத்துக்கொள்வாராம். வேறு யாருக்காவது விசேஷம் என்றால் அதை கொடுத்து விடுவாராம். அடுத்தவங்களுக்கு கிப்ட் கொடுத்தா மாதிரியும் ஆச்சு. நம்மகிட்ட இருந்த வேண்டா பொருளை கொடுத்தா மாதிரியும் ஆச்சு. புதுசா வாங்கும் செலவு மிச்சம் அப்பாடா என்னமா யோசிக்கிறாங்க.

  • முடிந்தவரை அனைவரது விழாக்களிலும் கலந்துக்கொள்ளுங்கள்.
  • புத்தகங்கள் அன்பளிப்பு தருவது பேஷனாகி வந்தது. ஆனால் வாங்கியவர் படித்தார்களா என்பது கேள்வி குறியாகிவிடுகிறது.
  • வெறும் கிப்ட் மட்டும் இல்லாமல் அதில் சின்ன கவிதை... அவரைபற்றிய சந்தோஷ வாக்கியங்களை கூடவே நம் கைப்பட எழுதி வைத்தால் இன்னும் ஆனந்தப்படுவார்களாம்.


எல்லாம் சரிதான் இங்க வந்துட்டு படிச்சுட்டு எனக்கு கருத்துரையில மொய் வைக்காம போயிடாதீங்க....
நாங்கள்ளாம் மொய் வக்கிறவங்களுக்கு மட்டும் தான் டோக்கன் கொடுத்து  சாப்பாடு போடுவோம்.அப்புறம் ஏமாந்துப்போகாதீங்க... சொல்லிபுட்டேன்.

11 கருத்துகள்:

  1. யோசனைகள் நல்லாத்தான் இருக்கு... இப்போது எல்லாமே பேஷனாகிவிட்டது என்பது உண்மை...

    பதிலளிநீக்கு
  2. மொய் பணம் முன்பு வேண்டுமானால் செலவு போக மிச்சமாகி இருக்கலாம் ,இப்போது வரவை விட செலவுதான் அதிகமாகிறது !
    எழுத்துக்கு எழுத்து மொய் வைச்சாச்சு,எப்போ வாக்கு மொய் செய்யப் போறீங்க ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க வாக்கும் ரொம்ப சரிங்க சார்...கண்டிப்பாக.

      நீக்கு
  3. நல்ல யோசனைகள் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்.

    பொருளுக்கு பதில் பணமாக கொடுத்தல், அவர்கள் தேவையானதை வாங்கிக்கொள்ளுவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. கடைசியில, வெரமா மொய் கேட்டு வாங்கிப்புட்டீங்களே.....பலே பலே.
    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரர்
    நல்ல யோசனைகள். இது பலருக்கு தெரிந்திருந்தாலும் அவசர உலகில் மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கான சரியான நினைவூட்டல் இந்த பதிவு. அது இருக்கட்டும் மொய் கவர் மறந்தாலும் பரவாயில்லை. வரும் ஜீலை 9 திருக்கோவிலூரில் எனது திருமணத்திற்கு அவசியம் வந்து விடுங்கள் சகோதரரே. வலை நண்பர்கள் நிறைய பேர் வர இருக்கிறார்கள். நீங்களும் வந்து சிறப்பிக்கவும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.அவசியம் திருமணவிழாவில் கலந்துக்கொள்கிறேன்.நலமுடன் நடக்க வாழ்த்துக்கள் சகோதரரே.

      நீக்கு
  6. அருமையான நடைமுறைச் சிந்தனை. நல்ல ஆலோசனைகளும் கூட. சில விழாக்களுக்கு நானும் என்மனைவியும் கிளம்பும் போது, அந்த விழாக்காரர் என் மகன், மகள் திருமணவிழாவிற்கு வந்து செய்த மொய்யை என் மனைவி நினைவூட்டுவார். அது எதார்த்த வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நல்ல பதிவிற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றிங்க ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!