வியாழன், பிப்ரவரி 20, 2014

கவிதை எழுதுவது எப்படி ?





கவிதையில பல வகை இருக்குங்க.

சொந்தக்கவிதை, சுட்டகவிதை, சோகக்கவிதை, காதல்கவிதை, மொழிபெயர்ப்புக்கவிதை, எளிதில் புரியம் கவிதை, என்றுமே புரியாதகவிதை...


இப்படி பல ரகம் உண்டு. நீங்கள் கற்றுக்கொண்டப்பின் ....எழுதியபின்... அது எந்தவகை அப்படினு (நமக்கே குழப்பமாக இருக்கும் இது கவிதை தானா அப்படினு அந்தமாதிரி சமயத்துல) ஒரு போட்டி கூட வைக்கலாம் அதற்கான ஐடியாக்கள் நிறைய அப்புறம் தருகிறேன், இப்ப கவிதை எழுத மட்டும் கத்துக்கிடுங்க ஓகே வா. 


‘நான் கவிஞனும் இல்லை-நல்ல
இரசிகனும் இல்லை
காதலெனும் ஆசையில்லா
பொம்மையும் இல்லை....

(காதலால் தான் கோடிக்கணக்கான கவிஞர் உருவாகிறார்கள் என்பது ஒரு ஐதீகம்.)

இப்படி....காதல் கவிதைகள்

‘நான் ஒரு முட்டாளுங்க -என்னை
நல்லா தெரிஞ்சவங்க
நாலுபேரு சொன்னாங்க.
நான் ஒரு முட்டாளுங்க

இப்படி தத்துவ பாடல்கவிதைகள் எழுத ஆசையா...
உங்களுக்காக மிக சிறந்த யோசனைகளை தெரிவிக்கிறேன். இதனை பயன் படுத்தி அனைவரும் கவிதை மழை பொழிய ( நாட்டுல தண்ணீர் மழைதான் பொழிய மாட்டேங்குது கவிதை மழையாவது பொழியட்டுமே ! )  கேட்டுக்கொள்கிறேன். யாராவது இதைப்பார்த்து புதுசா எழுத கத்துகிட்டா என் பிளாக் என்னுடன் சேர்ந்து மிக்க மகிழ்வுக்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.




சிலபேர் எப்பொழுதும் விரக்தியாகவே பேசுவார்கள் சில பேர் மட்டம் தட்டியே பேசுவார்கள்..... இவர்களைக்கண்டு நீங்கள் அச்சப்பட வேண்டாம்.
(நல்ல பேச்சாளன் பேசும்போது எதிரில் இருப்பவர்கள் எல்லாம் முட்டாள் அப்படி நினைச்சினு பேசுங்க தன்னால நல்லா பேச்சு வரும் அப்படினு...... சொல்லி..... நீங்க கேள்விபட்டிருப்பீங்களே அதுபோலத்தான் இதுவும்) “நாம எழுதி  யார் படிக்கப்போறாங்க’’..(ஏன்? நான் எழுதி இப்ப நீங்க படிக்கல அதுமாதிரிதான்.......{எல்லாம் உங்க தலை எழுத்து நான் என்ன செய்ய முடியும்}...அதுமாதிரி யாராவது படிச்சுதான் ஆகனும் அது அவங்க அவங்க தலையெழுத்து ).. அப்படிப்பட்ட எண்ணத்தை முதலில் தூக்கி எறியுங்கள். இதோ



தேவையான பொருட்கள்.


1)      பேனா (எழுதுகோல் அப்படினும் வச்சிக்கலாம்) குறிப்பு :- மை பேனாவா இங்க் பேனாவா அப்படினு எல்லாம் கேட்கப்படாது. அது உங்கள் சாய்ஸ். அல்லது பென்சில்-1
பின் குறிப்பு :- ஏன் ஸ்கெட்ச்சால எழுதக்கூடாதானு அக்குறும்புக்குனாலும் கேள்வி கேட்க கூடாது.

2)      பேப்பர் ( காகிதம் அப்படினும் சொல்லலாம்)-1.                         பின் குறிப்பு :- கோடு போட்டது அல்லது கோடுபோடாதது எது வசதிப்படுதோ அது உங்கள் விருப்பம்.                            சின்ன அறிவுரை :- கோடுபோட்ட தாளையே எடுத்துக்கோங்க. கோடு போட்ட பேப்பரே நல்லது; ஏன்னா வெள்ளைத்தாளில் சிலருக்கு நேராக எழுத வராது.... நம்ம நாட்டு ரோடு மாதிரி வளைந்து வளைந்து கோணல் மாணலாக இருக்கும். 
3)      கை ( விரல்கள் அப்படினு சொன்னாலும் ஓகே தான்)-1.          லெப்டா ரைட்டா என்பது எழுதுபவரின் வசதியை பொறுத்தது.
4)      பீலிங்க்ஸ் – தேவையான அளவு
5)      மூளை- இருந்து பயன்படுத்தினால் நல்லது.
6)      கம்பியூட்டரில் எழுதுபவர்களுக்கு தேவையானவை :-  முதல் இரண்டை தவிர்த்து 3,4,5,ஆகியவற்றுடன் மவுஸ், கீபோர்ட், மானிட்டர்...போன்றவை.

எல்லாம் எடுத்தாச்சா....
பீலிங்க்ஸ் வரல....மூளைக்கு நான் எங்க போவேன்? அப்படினு யாரும் சொல்லக்கூடாது.


ஓகே. இப்ப நாம கவிதை எழுத ரெடி ஆயிட்டோம்.

 சிறப்பு டிப்ஸ் :-

மேல பாக்கணும் அப்புறம் கீழ பாக்கணும் ... தாடி இருந்தா அதை கொஞ்சம் சொரியனும். பேன் கடிச்சா என்ன பண்ணுவீங்க அதை இப்ப செய்யுங்க.நெற்றியில  பேனாவாலயோ அல்லது பென்சிலாலயோ தட்டுங்க. கண்ணுல இரண்டு விரலால மூடி அழுத்தி விடுங்க. இதையெல்லாம் மாற்றி மாற்றி செய்யணும் அப்ப தான் நாம பெரிய கவிஞரா வர முடியும். இது தான் நல்ல கவிஞருக்கான அடையாளம்.


இப்ப பேப்பரை எடுத்துக்கோங்க.

( சமையல் செய்ய கற்றுக்கொள்ளும்போது முதலில் அடுப்பை பற்ற வைக்கவும் அப்படினு சொறது இல்லையா அது மாதிரி தான் .)


உங்க குல தெய்வத்தை ஒரு தபா கும்பிட்டுக்கோங்க. (கடவுளே நான் எழுதுவது என்னவென்று தெரியாமல் எழுதுகிறேன். என்னை மன்னியும்... இதை படிப்பவர்களுக்கு எதுவும் நேரக்கூடாது நீ தான் காப்பாத்தனும்)
 என்ன கடவுளிடம் வேண்டியாச்சா....

ரெடி .

இப்பதான் உங்க கவனம் பூரா கவிதை எழுதுவதில் இருக்கனும். அடுப்புல சோறு என்ன ஆச்சு... பையன் எங்க போனான். ஆமா..... வீட்டுக்காரரை
இன்னும் காணலியே...மாமியார்கிட்ட என்ன சண்டை போடலாம்  அப்படி இப்படி கவனத்தை சிதற விடாதீங்க....அப்புறம் கவிதை கன்றாவியா ஆயிடும்.

முக்கியமா செல்போனை ஆஃப் செய்து வைத்து விடவும்.(சிவ பூஜையில கரடி பூந்தா மாதிரி இவங்க முக்கியமான நேரத்துல தான் ஹ..........லோ...துபாயா... என் பிரண்ட் மார்க் இருக்காரா னு ராங்க் கால் போடுவாங்க. ராகம் போட்டு பேசுவாங்க.)

 இரகசியம் காப்பது அவசியம் :-

 

நீங்கள்


எழுதிக்கொண்டிருக்கும் பொழுது திடீர்னு யாராவது வந்து  .....உங்க குழந்தையாக கணவராக மனைவியாக கூட இருக்கலாம். என்ன எழுதர காட்டுங்க னு சொன்னா அந்த தப்ப மட்டும் செய்யாதீங்க. ஏன்னா நம்ம கவிதையை அவங்க பப்ளிஸ் பண்ணியோ புத்தகங்களுக்கு அனுப்பியோ லைக்கோ பாராட்டோ பரிசு பணமோ வாங்கிவிட வாய்ப்புள்ளது. 'பீ கேர்புல்'. 

ரெடி ஜூட்...



 


 கற்பனை குதிரையை தட்டி விடுங்க. கவிதையின் கரு எது வேண்டுமானாலும் இருக்கலாம். சாப்பாடு... சாக்கடை... எறும்பு.... யானை நாய்.... பேய்... காதல்.... சாதல் இயற்கை... செயற்கை... இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம்.


முதலில் ஒன்னு போடுங்க ‘1
அப்புறம் அதற்கு மேல் கோடு ‘ – ‘ இப்படி.
அப்புறம் கீழ் வளைகோடு . இப்ப  ‘க எழுதியாச்சு. ( இதான் ‘க வா அப்படினு பள்ளிக்கூடம் போகாதா நாட்டாமை மாதிரி கேட்கக்கூடாது.)


அடுத்தது


ஒத்த சுழி கொம்பு மாதிரி ஒரு வளைகோடு அதனை இணைத்து அடிக்கோடு பின்னர் மேல் நோக்கி ஒன்று இப்ப... வந்துள்ளது ‘வ’. இதற்கு மேல் சுழி இட்டால் ‘வி.

அடுத்தது ரெண்டு சுழி ன போட்டு கொஞ்சம் முனையை வளைச்சு விடுங்க. அடுத்தது ‘கபோட்டதுபோல் போட்டு கீழ் வளைகோடு ஒன்னு போடுங்க இப்ப வந்துள்ள எழுத்து ‘தை’.

இப்ப எல்லா எழுத்தையும் ஒரு தபா சேர்த்து படிங்க பாப்போம்.
 ‘க.....வி......தை.

‘கவிதை

  ....நீங்க “கவிதை எழுதிட்டீங்க.

 



 நல்லா ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இல்லாம  படிச்சுப்பாருங்க .
க.....வி.....தை.
கவிதை எழுதி முடிச்சாச்சு.


இப்படித்தாங்க  கவிதை எழுதனும். உங்ககிட்ட யாராவது கேட்டாலும் சந்தோஷமா சொல்லிகொடுங்க. ஏன்னா சொல்லிக்கொடுத்தா இரண்டு பலன், அடுத்தவருக்கு உதவி செய்தா மாதிரியும் இருக்கும். நாமும் இன்னும் நல்லா கத்துக்கிடலாம்.
என்னங்க ‘கவிதைஎழுத கத்துகிட்டீங்களா .


அட்டகாசமா அழகா எழுதி எல்லோரையும் அசத்துங்க. 

முக்கிய அறிவிப்பு :-கம்பியூட்டர்ல கவிதை எழுத சொல்லிகுடுக்கணும்னா கொஞ்சம் செலவு ஆகும் பரவாயில்லையா? அப்படினா மெயிலில் தொடர்புக்கொள்ளவும். மீண்டும் அடுத்த வகுப்புல வேற தலைப்போட சந்திக்கலாம், வணக்கம் கூறி  விடைபெறுவது உங்கள் அன்புள்ள....
 

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!