செவ்வாய், நவம்பர் 11, 2014

'ஹோம்' அட்ரஸ்



அம்மாவை
அடித்து உதைத்து
அனாதை ஆசிரமத்தில்
விட்டு வரும் வழியில்
வாங்கி வந்தோம்
ஐயாயிரம் ரூபாய்க்கு
அழகிய நாய்குட்டி-
அன்பாய் வளர்க்க.

 


'பாவி மவ' இருந்த அறை
பெனாயில் ஊற்றி கழுவினோம்-
'பப்பி'க்கு பாதுகாப்பு.


அவள் 
அழகில்லை. வெளியில் நம்முடன்
அழைத்துச்செல்லத்தயங்கினோம்.
அழகிய நாயுடன்
அலைகிறோம்- நடுத்தெருவில் பெருமையாய்.


'நாய் நாய்' எனச்சொல்லு
அடுத்தவரை 
அழகிய சிரிப்பில் 
நாம் சொன்னபோது 
அகம் மகிழ்ந்தவளை 
நாம் தாயாய் மதிக்கவில்லை என்றாலும் 
நாயாய் கூட  மதிக்கவில்லை
இன்று.


நம் 
எச்சில் முத்தத்திற்காய் 
ஏங்கி
நடமாடும் தொழிற்சாலையானவளை
தொட்டால் அருவருப்பாய்......
தொடமறுத்து 
துரத்திவிட்டோம்.
தூக்கி முத்தம் கொடுக்கிறோம்-
ஐந்தறிவு நாய் குட்டிக்கு. 


அம்மா இருந்த அறை 
இப்பொழுதுதான் 
அழகாக இருக்கிறது 
அழகிய அந்த நாய் குட்டியால்.

 
நாம் 
இவ்வாறு 
நினைத்திருக்க.........


நாம் செல்லமாய் 
கூடவே கூட்டிச்சென்ற  
நம் பிள்ளைகள்
'ஹோம்' அட்ரசை 
மறவாமல் குறித்துக்கொண்டனர்-

எதற்கும் உதவுமே என்று.

தயவுச்செய்து  யாவருக்கும் 
தெரியும்படி
தெளிவாய் எழுதி வையுங்கள்-
உங்களின்
ஹோம் அட்ரஸ்.




 

6 கருத்துகள்:

  1. முற்பகல் செய்யின்
    பிற்பகல் விளையும்
    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான கருத்துரைக்கு மிக்க நன்றிகள் அய்யா.

      நீக்கு
  2. மனதை வருத்திய கவிதை! அருமை! ஜனங்கள் என்னிக்குத் திருந்துவாங்களோ! இரண்டையும் நேசிக்கலாமே!

    பதிலளிநீக்கு
  3. கருத்துரைக்கு மிக்க நன்றிகள் அய்யா.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!