திங்கள், மே 12, 2014

கிராமத்து நட்சத்திரங்கள்




என் இனிய கிராமத்து மக்களே! என விளித்து கூறுவது வாடிக்கை. இனிய கிராமத்து மக்களின் வாழ்க்கை சிலசமயம் சங்கடங்களை ஏற்படுத்துவது உண்டு.பல சமயம் ஆச்சர்யங்களை ஏற்படுத்துவது உண்டு. கிராமத்தாரின் வானவியல் சாஸ்த்திரங்கள் என்னை சில வியக்க வைத்திருக்கிறது.மழைவரும் என்றால் கண்டிப்பாக சில துளிகளாவது தூரிவிட்டுதான் செல்லும். வராது என்றால் கண்டிப்பாக வராது. எப்படித்தான் கணிக்கிறார்கள் என்பது சில வானில் ஏற்படும் மாற்றநிலைகளினைக்கொண்டு கண்ணால் கண்டு இத்தனைக்கும் படிப்பறிவில்லாதவர்கள் அல்லது ஓரளவே படித்தவர்கள்.... கண்டறிந்தது.....கணித்தது எல்லாம் மகா ஆச்சரியமே!


சிறு பிள்ளையாக இருக்கும்பொழுது நான்கு வீடுகளின் பெரிய வாசல். சித்தப்பா பெரியப்பா குடும்பங்கள்.. இரவு சாப்பிட்டு முடித்ததும் (எங்கள் வீட்டில் செய்தவை அங்குசெல்லும் அங்கு செய்தவை எங்களுக்குவரும்.வாசலில் அமர்ந்து எல்லாகுடும்பமும் ஒன்றாக சாப்பிடுவது வழக்கம்.தட்டுகள் மட்டும் வேறுவேறே தவிர மனமும் சாப்பாட்டு பண்டங்களும் ஒன்றாகவே இருக்கும்) வாசலில்தான் அனைவரும் தூக்கம் வரும்வரை பேசிக்கொண்டு விளையாடிக்கொண்டு.....வாசலில் படுத்து...கதை சொல்வது வானநட்சத்திரங்கள் பற்றி கூறுவது பெரியவர்களின் வாடிக்கை.
இன்று யதேச்சையாக வானில் பார்த்தவுடன் பழைய ஞாபகங்கள். உங்களுடன் சில.....


உழவுகோல் நட்சத்திரம்.
 தென்கிழக்கு தலைக்கு மேல் 70 அல்லது 80 டிகிரி கோணத்தில்  பாருங்கள் பளிச்சென்று மூன்று நட்சத்திரங்கள் ஒரே நேர்கோட்டில் உழவன் கையில் வைத்திருக்கும் கோல் போல் இருக்கும்.

ஜெபமாலை நட்சத்திரம். 
 

சரியாக தலைக்குமேல்
                   கிறித்தவ ஜெபமாலை வடிவில் இருக்கும்.
 நான்கைந்து நட்சத்திரங்கள் வளைந்து அழகாக காட்சிதரும்.


கட்டில்கால் நட்சத்திரம்.
நான்கு மூலையிலும் ஒவ்வொரு நட்சத்திரம், பார்ப்பதற்கு கட்டிலின் நான்கு கால் முனைகள் போல் இருக்கும். இதுவும் தென்கிழக்கு பகுதியில் காணப்படும்.


சப்தரிஷிமண்டலம்.
 

வடக்கு திசையில் ஏழு நட்சத்திரங்கள் நான்கு முனைப்புள்ளிகளுடன் மூன்று வால் பகுதிப்போல் வளைந்து காணப்படும்.நேரம் ஆக ஆக இதன் வால் பகுதி திரும்பும். ‘அம்மி மிதித்து அருந்ததிப்பார்த்து என்று சொல்வார்களே அந்த அருந்ததி நட்சத்திரம் இங்கிட்டுதான் இருக்கிறது.


விடிவெள்ளி;
வானில் மிக பிரகாசமாய் தெரியும் நட்சத்திரம். வெள்ளி முளைச்சாச்சி இன்னும் தூங்கறியா என்று எழுப்புவார்கள் ( அட! இப்ப சூரியன் முளைச்சி நிலா வந்தாகூட ஏன்டா னு யாரும் அக்கரையா கேக்க ஆள் இல்ல)

குஞ்சுதாய்பெட்டை:
     பிரகாசமான ஒரு நட்சத்திரத்தை சுற்றி சில சிறு நட்சத்திரங்கள் இருக்கும். பார்ப்பதற்கு தாய்கோழி தன் குஞ்ச்சுகளுடன் இருப்பதுபோன்று இருக்கும்.

சிலுவை நட்சத்திரம்;
இயேசு கிறிஸ்துவின் சிலுவை அடையாளம் போல நான்கு நட்சத்திரங்கள் இருக்கும்.

இவை எல்லாம் உங்கள் பகுதியில் இருக்கா செக் பண்ணிப்பாருங்க...பிள்ளைகளை கூப்பிட்டு உங்களுக்கு இதைவிட அதிகம் தெரிந்திருக்கும் அவைகளை சுட்டிக்காட்டுங்கள்....

இவ்வளவு பெயர்கள் முக்கியம் அல்ல. இவைகள் ஒரே இடத்தில் இருப்பதில்லை நகரும்.....இந்த நட்சத்திரங்களின் நகர்வுகளைக்கொண்டு இது இங்கிருந்தால் இத்தனை மணி என்று சரியாக கூறுவார்கள் அதுதான் ஆச்சர்யம்.

நிற்க.................

   இக்கால சூழ்நிலையில் ஒன்றாக வசிக்க முடியாவிட்டால் கூட

 பேசுங்கள்:    இப்பொழுது யாருக்கும் சொல்லவும் நேரம் இல்லை கேட்கவும் தயாரில்லை என்ற கதையாகிவிட்டது நட்சத்திரங்களின் பெயர்கள் முக்கியமல்ல... நாம் அனைவரிடமும் அன்பாக பேசுவதுதான் முக்கியம்.குழந்தைகளிடமும் சுற்றத்தாரிடமும் கொஞ்சமாவது பேசுங்கள்.


உறவுகளினைச்சொல்லிக்கொடுங்கள்;
கொஞ்சம் தூறத்து சொந்தமான தம்பியை மச்சான் என்றழைப்பது வாடிக்கையாகி விட்டு பெரியவர்கள் முன்னிலையில் இன்றும் திட்டு வாங்கும் நாங்கள்.... நாமே இப்படி என்றால் என்னை சித்தப்பா என்றழைக்க வேண்டிய பையன் மாமா என்றழைக்கும்போது மிகவும் வலிக்கிறது.எனவே நமது பிள்ளைகளுக்கு இவர் இவர் இன்னார் என்பதினை தெளிவாக சொல்லிக்கொடுப்போம்.


ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்:  
என் நெருங்கிய உறவினர் எனது இரண்டு மகள்களின் பெயரினை மாற்றி மாற்றி அழைக்கும்பொழுது பெரியவளை சின்னவள் பெயர் சொல்லி அழைப்பதும் சின்னவளை பெரியவள் பெயர் சொல்லி அழைப்பதும்... வேதனையாக இருக்கும்...இத்தனைக்கும் மிக மிக அருகாமையில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கிறோம்...இங்கேயே இந்த நிலைமை என்றால் அமெரிக்கா ஆஸ்திரேலியா போன உறவுகளின் நிலை....ஆக கூடுமானவரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களின் மீதான அன்பை மேலும் வலுப்படுத்தும். அப்பா...எத்தனை வருஷம் எங்கியோ இருந்தாலும் நம்ம மறக்கல என்று அவர்களையும் அறியாமல் உங்கள் மீது மதிப்பை கூட்டும்.

குறிப்பு:-

 இது அறிவுரைப்பகுதியல்ல...உங்கள் மீதான மதிப்புக்கள் உயர எளிய வழிமுறைகள். பின்பற்றுங்கள். சந்தோஷமான எதிர்கால பிள்ளைகளின் வாழ்விற்விற்கு வித்திடுங்கள்.....!!!

என்னங்க நான் சொல்றது உண்மைதானே ?
                         

6 கருத்துகள்:

  1. seyvom nangal seyvom!! arumaiyaana enna ottam ayya! kalakkungal!

    பதிலளிநீக்கு
  2. நல்ல பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டு உள்ளீர்கள்... தகவல்கள் அறியாதவை... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. மழை வருவது மயிலுக்கு (ஸ்ரீ தேவி அல்ல )தெரியும் என்பார்கள் ,பெருசுங்களுக்கும் தெரியும் போலிருக்கே !

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!