பிள்ளைகளுக்காக பெற்றோரும்
பெற்றோருக்காக பிள்ளைகளும்
கடிகாரம் பார்த்து
காத்துகிடக்குமிடம்
பள்ளிக்கூடமாகிப்போனது.
குழந்தைகள் தின விழா
விருந்தினர் தேவை இல்லை
வெறும் சாக்லேட்டும் தேவை இல்லை
விளையாட விட்டாலே
விருந்துண்ட மகிழ்ச்சி காண்பவர்களை
கை கட்டி வாய் பொத்தி
வாழ்த்தும் விருந்தினரின் வாய் பார்த்து
கை தட்டும் ரோபோக்களாய்
கட்டிப்போடும் ....பள்ளிக்கூடம்.
பையடங்கா பொதி சுமையில்
கையடங்கா புத்தகத்தின்
கடலளவு வீட்டுப்பாடம்.
விளையாடவோ
வீட்டு வேலைகள் பழகவோ
உறவினர் வீடு செல்லவோ
உதவாத விடுமுறையை
விட்டுத்தொலைக்கும் பள்ளிக்கூடம்.
குண்டு குண்டாய் கையெழுத்தை அழகாக்கி- உடல்
குண்டாகி போகும்படி தலையெழுத்தை அசிங்கமாக்கி
குதர்க்கம் பண்ணும் பள்ளிக்கூடம்.
இன்று ஒரு நாளாவது...
கலைநிகழ்ச்சிகள் வேண்டாம்
கனவாண்களின் உரை வேண்டாம்
கட்டவிழ்த்து விடுங்கள்
காலார ஓடட்டும்
வாயார பேசட்டும்
மனசார சிரிக்கட்டும்.
உடலை உரமாக்குங்கள்
படிப்பு பின்னாலயே பின்தொடரும்.
அப்பொழுதுதான்
அப்துல்கலாம்களும்
அன்னை தெரசாக்களும்
சக்கரை வியாதியில்லா
சந்தோஷ மனிதர்களும்
போதி தரிசனம் பெற்ற புத்தர்களும்
விவேகமான விவேகானந்தர்களும்
வருங்கால வீதிகளில்
வலம் வருவார்கள்.
விளையும் பயிர்களை
விதையிலேயே
வீணாக்காதீர் !.
சிட்டுக்குருவிகளாய் சிறகடித்து
பட்டாம் பூச்சிகளாய் பறக்கட்டும்.
அவர்கள்
ஆடிப்பாடி ஓய்ந்தப்பின்
அரங்கேற்றலாம்
அங்கே ஒரு குழந்தைகள் தின விழா.
பின் குறிப்பு : இன்னாள் குழந்தைகளுக்கும் பதிவு உலகில் பந்தாவாய் பவனி வரும் முன்னால் குழந்தைகளுக்கும்
‘குழந்தைகள் தின விழா வாழ்த்துக்கள்’.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!