சின்ன.... சின்ன ....
சின்ன.... சின்ன ....
&&&&&&&&&&&&&&&
பேசாத வார்த்தைகளின்
பெயர் -
மௌனம்.
...........................
திடீரென ஏறுகிறது
திடீரென குறைகிறது
“பிபி” யும் பெட்ரோலும்
ஒன்றோ ?
....................................
வடையும் விருந்தும்
வயிற்றை நிறைத்தது.
அன்றாடம் வர வேண்டும்
அமாவாசை.
வரம் கேட்கும் காக்கைகள்.
......................................
ஒரு மனம் கட்டும்
ஒன்பது தாஜ்மகால்.
செலவா என்ன?
காதல் கற்பனை.
..................................
சின்ன சின்ன பொய்கள் தான்
சிறப்பாக்குகிறது-
வாழ்க்கையையும்... கவிதையையும்.
...........................................
உங்களுக்கு
வேண்டாதவைகளால்
என்
வயிற்றை நிரப்பிக்கொள்கிறேன்-
குப்பைத்தொட்டி.
...........................................
புயல் வர வேண்டும்
பூகம்பம் வர வேண்டும்
சுனாமி வர வேண்டும்
உலகத்தாரின் மனித நேயம் வளர.
மற்ற நேரங்களில்
மறைந்திருந்து பார்க்கும்
மர்மம் என்ன மனித நேயமே ?
.......................................
ஆயக்கலைகள்
அறுபத்துநான்கில் ஒன்றாக இருக்குமோ ?
இலஞ்சம் வாங்குவது.
....................................
“மச்சான்ஸ்”.....
“செம.”...
பின்னிட்ட....
“தூள்”.....
“குத்துனா இது தான்.
செம குத்து”....
“சான்ஸே இல்ல”.....
அன்றாடம் நாம் கேட்கும்
அழகிய தமிழ் வார்த்தைகள்.
.......................................
விளையாட்டுக்கு கூட
வீடு கட்டி
விளையாட முடியவில்லை-
மணல் கொள்ளை.
................................
அன்னை இல்லம்
அம்மா உணவகம்
தாய் மருந்தகம்
அனைத்தும் அவள் பெயரில்
இருக்க வேண்டும்.
அவள் மட்டும்
அனாதை இல்லத்தில்.
...................................
ஆழ குழி தோண்டி
அதுலே ஒரு முட்டையிட்டு
அன்னார்ந்து பார்த்தால்
தொண்ணூறு முட்டை-
தென்னை. இது அந்த காலம்.
ஆழ குழி தோண்டி
அதுலே கம்பி நட்டு
அன்னார்ந்து பார்த்தால்
ஆயிரம் பெட்டிகள்-
அடுக்கு மாடிகள். இது இந்தக் காலம்.
...................................................
.
தொடர்புடைய இடுகைகள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!