செவ்வாய், ஜனவரி 14, 2014

பழையது சாப்பிட்டேன்.



                    
                             (சிறுகதை)


25 ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி சொல்லப்பட்ட சிறு மற்றும் சிறந்த கதை. உங்கள் நினைவிற்காக.

பணக்காரன் ஒருவர் இருந்தார். அதிக சொத்துக்கள். தாத்தா அப்பா சேர்த்து வைத்த சொத்துக்களே நான்கு ஐந்து தலை முறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். அவ்வளவு செல்வ செழிப்பு. அதனால் அவனும் வேலைவெட்டி எதற்கும் போகாமல் வீட்டிலேயே ஜாலியாக உட்கார்ந்துக்கொண்டு சாப்பிட்டு சுற்றி திரிந்து வந்தான் . ஊரை சுற்றுவது நண்பர்களை விருந்துக்கு அழைத்து கும்மாளமிடுவது.... இப்படியாக கழிந்தது வாழ்க்கை.

 அவனுக்கு திருமணம் ஆகியது.
கணவனின் போக்கு மனைவிக்கு பிடிக்கவில்லை. இப்படியே போனால் நிலைமை என்னாவது ....என்னதான் சொத்துபத்து இருந்தாலும் நாமும் கொஞ்சமாவது உழைத்தாலாவது தானே இருக்கிற சொத்துக்களையாவது காப்பாற்ற முடியும்...உழைக்காமலே உண்பது அவளுக்கு பிடிக்கவில்லை.
 கணவனிடம் சொல்லிப் பார்த்தாள். அவன் மசிவதாக இல்லை. என்ன செய்யலாம் என அடிக்கடி யோசிப்பாள்.
பொங்கல் திருநாள் வந்தது.
கணவன் வேலை ஆட்களிடம் சொல்லி புதுப்பானை.... மஞ்சள்..... கரும்பு.....அரிசி....வெல்லம்.... இப்படி தேவையானதை எல்லாம் வாங்கி வரச்செய்தான்.
பட்டாடை உடுத்தி குடும்பத்தார் மற்றும் வேலையாட்கள் உடன்
பொங்கல் கோலாகலமாக கொண்டாடினான் . புது துணி மணி  அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அவன் வெளியில் சென்று நண்பர்களை விருந்துக்கு அழைத்து வருவதாகவும் வருவதற்கு நேரம் ஆகும் எனவே மனைவியை  சாப்பிட்டு முடித்து விட்டு விருந்த்துக்கு தயார் செய்து வைக்கும் படி கூறி விட்டு வெளியில் சென்றான்.
 நண்பர்கள் ஏழெட்டு பேர் சகிதம் உள்ளே நுழைந்தான். நெய்மணம் கமகமக்க பொங்கல் வாசனை காற்றிலே வாசலைத்தாண்டி பரவி வந்தது. வயிராற ஒரு பிடி பிடிக்கலாம் என நண்பர்கள் பேசிகொண்டனர்.
பல்வேறு வகையான பொங்கல் கூடவே வடை ......இத்தியாதிகள். விஸ்தாரமான சாப்பாட்டு மேசை....அனைவரும் பார்த்த மாத்திரத்திலேயே வயிறு நிறைந்து விடும் அளவிற்கு வகை வகையான சமையல். அனைவரும் மேசையில் அமர்ந்து உண்பதற்கு ஆயத்தமானார்கள்.
நண்பர்களுடன் அமர்ந்த பணக்காரன் பெருமை பொங்க அனைவருக்கும் வாழ்த்து சொல்லி உண்ண சொன்னார். அப்பொழுது மனைவியைப் பார்த்து சாப்பிட்டாயா? என கேட்க மனைவியும் “ஆம்  பழையது சாப்பிட்டேன் என்றாள். அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது . “என்னது பழையது சாப்பிட்டாயா ? கோபத்தின் உச்சிக்கே போனான் பணக்காரன். நண்பர்கள் அதிர்ச்சியில் வாயில் வைத்த பொங்கலை விழுங்க முடியாமல் திகைத்தனர். வேலையாட்களை அழைத்து சரமாரியாக திட்டி அடித்து விரட்டினான்......
“என்னடி சொல்ற?
ஆமாங்க பழையதுதான் சாப்பிட்டேன்..இது ஒன்னும் நீங்க சொந்தமா உழைச்சி சேர்த்த காசுல செய்தது ஒன்றுமே இல்லையே எல்லாம் உங்க தாத்தா அப்பா சேர்த்த காசுல வாங்கியது தானே..... அப்ப அவங்க சேர்த்து வச்சதெல்லாம் பழைய சொத்து தானே அப்ப பழைய சொத்துல வந்த பொருட்கள் எல்லாம் பழையது தான்... அதனால தான் அப்படி சொன்னேன் என்றாள். அவனுக்கு எல்லாம் புரிந்தது.... இனிமேல் திருந்தி உழைப்பதாக வாக்களித்தான். மனைவி மற்றும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இனிய விருந்துண்டு மகிழ்ந்து பொங்கல் விழா கொண்டாடினர்.
 கதையின் கருத்து : எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆகவே உழைப்பால் உயர்ந்து உன்னத விழாக்கள் பல கொண்டாட அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.

Pongal Glitter Graphic for Hi5
Festival, Pongal | Forward this Picture

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!