செவ்வாய், டிசம்பர் 10, 2013

பெத்தவங்க ஆசை




           


ஏ புள்ள மாரியம்மா எங்கடி நீ போனியம்மா

பசியோட வந்திருக்கேன் பாசத்தோட பரிமாறு

ஏ புள்ள மாரி சுடுசோறு போட வாடி



சுனாமி வந்ததால சுறாமீனும் கிடைக்கவில்ல

கருவாடு குழம்புமில்ல காரகுழம்பு இருக்கு மச்சான்

நாக்கு ருசி பாரு இந்தா மூக்குமுட்ட சோறு



பெத்தமவன் சாப்பிட்டானா  பள்ளிக்கூடம் போய் வந்தானா

பள்ளியில என்ன சொல்லி தந்தாங்கனு கேட்டு வைய்யி- நான்

பட்டபாடு போதும் மக்க பட்டம் பெற வேணும்



பள்ளிக்கூடம் பாத்தேனுங்க பளிச்சினு இருக்குதுங்க

விலையில்லா பொருளு எல்லாம் என்னையேதான் மயக்குதுங்க

எப்படியெப்படியேனும் புள்ள பட்டம் பெற வேணும்



நாம கூலி வேலை செஞ்சதெல்லாம் கப்பலேறி போக வேணும்

கஞ்சி கூழு குடிச்சதெல்லாம் கனவாகி மறைஞ்சி போணும்

மதிக்காத சொந்தமெல்லாம் மூக்குமேல விரலை வைக்க



முண்டாசு சொந்தமெல்லாம் மொத்தமாக கூட்டி வச்சி

கோவிலுக்கு கெடா வெட்டி பொங்க ஒண்ணு வக்க வேணும்
 
குலதெய்வ கோவிலுக்கு கும்பாபிஷேகம் கொடுக்க வேணும்



அமெரிக்கா ஆப்பிரிக்கா இங்கிலாந்து போக வேணும்

கம்பியூட்டர் பட்டம் படிச்சி  காரு பங்களா வாங்க வேணும்

டாக்டரு பட்டம் வாங்கி தர்ம ஊசி போட வேணும்

ஜில்லா கலெக்டர் ஆகி தில்லாக நடக்க வேணும்
.....................................................
..............................................................
..........................................................கனவுகள் விரியும்..........

தலைப்பாகை துண்டெடுத்து

தண்ணீர் வியர் துடைத்து

வேகாத வெயிலுக்கு

வேப்பங்காத்த ஓசி வாங்கி

பசிச்ச வயித்துக்கு

பழங்கஞ்சி ஊறுகாயும்

வெல்லம் கடித்த கூழும்

காயம் கடித்த களியும்

சோளம் பொங்கி சோறும்


எதை எதையோ சாப்பிட்டு

எப்படி எப்படியோ வாழ்ந்து
 
வெயிலில் நனைந்தாலும் 

மழையில் காய்ந்தாலும்
 
மாறாத வெள்ளை மனம் கொண்டு

வரம் வேண்டி கிடக்கும் பெத்தவங்க ஆசை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!